search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர் தொகுதி"

    பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி? என்று காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்ட ணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோதிமணி ‘மாலை மலர்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

    கே: முதன் முதலாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப: இந்த வெற்றி சாதாரண மக்களுக்கான வெற்றியாக பார்க்கிறேன். தனிப்பட்ட ஜோதிமணிக்கு கிடைத்த வெற்றி இல்லை. அரசியலில் ஒரு பிம்பம் இருக்கிறது. அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் பணம் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசாக இருக்க வேண்டும். குற்றப்பின்னணி உடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்துகள் இன்றைக்கு வேகமாக பரவி வேரூன்றியுள்ளது.

    ஆனால் தொடர்ச்சியாக நேர்மையாக, அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்றினால் சாதாரண பின்னணி உடையவரும் எந்த உயர் பதவிக்கும் வர முடியும் என்ற செய்தியை என் வெற்றி தந்திருக்கிறது.

    கே: அரசியலில் பெரிய பின்புலம் இல்லாத நீங்கள் எப்படி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டீர்கள்?

    ப: என்னை வேட்பாளராக அறிவிக்கும் முன்பே கட்சிக்குள்ளும், வெளியிலும் பொருளாதார பின்னணி உடையவர்தான் எம்.பி. தேர்தலில் போட்டியிட முடியும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதியாக இருந்து எனக்கு வாய்ப்பளித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அதனை ஏற்றுக்கொண்டார்.

    தி.மு.க-காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைத்து வெற்றி பெறச்செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் என்னை தங்களின் வீட்டின் ஒரு பெண்ணாக பார்த்துக்கொண்டார்கள். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது.

    கே: பாராளுமன்றத்தில் முதன் முதலாக என்ன பேசப்போகிறீர்கள்?


    ப: என்ன பேசுவது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களின் உரிமை, வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தின் உரிமை, அடையாளம், வளர்ச்சி போன்றவற்றிற்காக என் குரல் ஒலிக்கும். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பா.ஜ.க. செயல்பட்டால் மோடிக்கு எதிராக போர்க்குரல் தொடுப்பேன்.

    கே: தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும், தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளதே?

    ப: காங்கிரஸ் கட்சியின் தோல்வி வலி நிரம்பியது. இந்த தோல்வியானது கட்சியை பாதிக்கப்போவதில்லை. தனி மொழி, தனி கலாச்சாரம் போன்றவற்றை விரும்பும் மாநில மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். பிரசாரத்தின்போது ராகுல் காந்தி ஒற்றுமையையும், அன்பையும் விதைத்தார். ஆனால் அதற்கு பதிலாக மோடி பிரிவினையையும், வெறுப்பையும் விதைத்தார். இந்த தேசத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெண்களின் உரிமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் பற்றி மோடி வாய் திறக்கவில்லை. 2014-ல் மோடி வெற்றி பெற்றபோது அதை செய்வார், இதை செய்வார் என ஒரு கொண்டாட்டம் இருந்தது. ஆனால் இப்போது அதை காணவில்லை. அதற்கு பதிலாக ஒரு வித இறுக்கமே காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களில் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. அது சீட்டுகளாக மாறவில்லை. பிரதமர் மோடி கடந்த கால தவறுகளை திருத்தி கொள்வார் என எதிர்பார்க் கிறோம்.

    கே: தமிழகத்தில் மட்டும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எப்படி அமோக வெற்றியை பெற்றது?

    ப: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்திலேயே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். கடுமையாக உழைத்தார். அதனை மக்களும் ஏற்றுக்கொண்டனர். மோடியின் அடக்குமுறையையும், எடப்பாடி பழனிசாமியின் அடிமை ஆட்சியையும் தமிழக மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் அமோக வெற்றியை தந்திருக்கிறார்கள். மோடியின் அடக்குமுறை கேரளாவிலும் எடுபடவில்லை.

    கே: 4.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நினைத்தீர்களா?

    ப: நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தம்பி வி.செந்தில்பாலாஜி (தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்) யும், நானும் அமர்ந்து பேசினோம். குழுக்கள் அமைத்து கிராமங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சனைகளை அறிந்து தனித்தேர்தல் அறிக்கை தயாரித்தோம். எதிர் வேட்பாளர் மூத்த அரசியல்வாதி பலமுறை கரூர் தொகுதியில் வென்றவர் என்பதை அறிந்து பிரசாரத்தை முன்னெடுத்தோம். அவர்கள் ஆளுங்கட்சி எந்திரத்தை தவறாக பயன்படுத்தினர். ஆனால் நாங்கள் நேர்மையாக, அமைதியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்தோம்.

    முதற்கட்ட பிரசாரத்தின் போதே 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கணித்தோம். பின்னர் போக, போக மக்களின் தன்னெழுச்சி, உணர்ச்சி வெள்ளத்தை பார்த்தபோது அது இன்னும் அதிகரிக்கும் என்பது தெள்ளதெளிவாக தெரிந்தது. கரூர் பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் எனக்கு கரூர் தொகுதி மக்கள் அளித்துள்ளார்கள்.

    கே: ராகுல் காந்தியுடன் பேசினீர்களா?

    ப: பேசினேன், வாழ்த்து தெரிவித்தார். விரைவில் அவரை சந்திக்க உள்ளேன். பதவி ஏற்பு தேதி உறுதியாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை வென்றுள்ளார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இதில் பலர் பெயர் அடிபட்டாலும் ஜோதிமணி பெயர் பலமாக உச்சரிக்கப்பட்டது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உறுதியாக இருந்து அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். அவரின் நம்பிக்கை வீணாகாமல் காங்கிரஸ் வெற்றிக் கொடியை நிலைநாட்டியுள்ளது.

    இந்த தொகுதியை பொறுத்தமட்டில் சுதந்திரத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக பல தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ச்சியாக வென்றது. கடைசியாக 1980-ல் காங்கிரஸ்-அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் காங்கிரசை சேர்ந்த துரை செபாஸ்டியன் வெற்றி பெற்றார். அதன்பின்னர் 38 ஆண்டுகளாக காங்கிரசின் குரல் கரூரில் ஒலிக்கவில்லை. போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்கவில்லை.

    1980-களுக்கு பின்னர் நடந்த தேர்தல்களில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க-தி.மு.க. கட்சிகளுக்கு இடையே இருமுனைப் போட்டி இருந்தது. இதற்கிடையே 1996-ல் நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (மூப்பனார்) சார்பில் நாட்ராயன் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அ.தி.மு.க.வுக்கு 2-ம் இடம் கிடைத்தது.

    பின்னர் 1998-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மு.தம்பிதுரை வெற்றி பெற்றார். இதில் நாட்ராயனுக்கு 2-ம் இடம் கிடைத்தது. 2009-ல் நடந்த தேர்தலில் மு.தம்பிதுரை வென்றார். பின்னர் 2014- தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி வெறும் 30,459 வாக்குகள் பெற்று 4-ம் இடம் பிடித்தார். இதிலும் மு. தம்பிதுரை கரூர் தொகுதியில் மீண்டும் 2-வது முறையாக வென்றார்.

    இந்த நிலையில் தற்போது 39 ஆண்டுகளுக்கு பின்னர் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை வென்றுள்ளார்.

    இதன் மூலம் தம்பிதுரையின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஜோதிமணி முட்டுக்கட்டை போட்டுள்ளார். மேலும் கரூர் பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
    கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    கரூர்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    கரூர் பாராளுமன்றத் தொகுதியில் 9 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அவர் 3,20,678 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 537 வாக்குகள் பெற்றிருந்தார்.

    அமமுக வேட்பாளர் தங்கவேல் 11 ஆயிரத்து531 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 18 ஆயிரத்து 756 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் .ஹரிஹரன் 7920 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    கரூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முதல் சுற்று முடிவின்படி 19,663 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் 6,78,373 ஆண்கள், 7,08,196 பெண்கள் மற்றும் 67 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13,86,636 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த தொகுதியில் கரூர், கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை, அரவக்குறிச்சி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் தம்பிதுரை, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அ.ம.மு.க. வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேல், மக்கள் நீதி மய்யம் கட்சியில் டாக்டர் ஹரிகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா உள்பட மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 10,97,024 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். ஆண்கள் 5,32,760 பேரும், பெண்கள் 5,64,233 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேரும் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். இது 79.11 சதவீதமாகும்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் மற்றும் உதவியாளர் மற்றும் பணியாளர்கள் பணியில் இருந்தனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    ஜோதிமணி (காங்கிரஸ்)-35,110

    தம்பிதுரை (அ.தி.மு.க.)-15,447

    முதல் சுற்று முடிவின்படி 19,663 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி முன்னிலையில் இருந்தார்.
    கரூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு எடுக்கும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் தெரிவித்தார். #KarurPolls #CollectorAnbazhagan
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது. இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே இடத்தில் பிரசாரத்தை நிறைவு செய்வதில் போட்டி ஏற்பட்டு பெரும் வன்முறை வெடித்தது.

    இதில் போலீசார் மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கூறுகையில், கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சதி நடப்பதாக தெரிவித்தார்.

    மேலும் கரூர் மாவட்ட கலெக்டர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறி டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் வக்கீல் மூலம் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் கூறுகையில், கரூர் பாராளுமன்ற தொகுதி நிலவரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தேன். கரூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு எடுக்கும்.

    காய்ந்த மரம் தான் கல்லடி படும், நேர்மையாக இருப்பவர்கள் மீது புகார் கூறுவது இயல்புதான்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarurPolls #CollectorAnbazhagan
    அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை விருப்ப மனு அளித்துள்ளதால் கரூர் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிட உத்தரவாதம் இல்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ThambiDurai #ADMK
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பிதுரை இருந்து வருகிறார். இவர் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியையும் வகித்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தம்பிதுரை கடந்த சில மாதங்களாக கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார். இதனிடையே விருப்ப மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

    தம்பிதுரை கரூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் நிலையில் அமைச்சரின் தந்தையும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த தம்பிதுரை, ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றார். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சீத்தப்பட்டி காலனி பகுதியில் தம்பிதுரை எம்.பி. பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கரூர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். எனக்கு சீட் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவருக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன். அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றிக்கு அயராது உழைப்பேன்.

    தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க அ.தி.மு.க. சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நான் இடம்பெறவில்லை. அதனால் நான் கூட்டணி குறித்து எதுவும் சொல்ல முடியாது. பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தோம். அதற்கும் கூட்டணிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் அவரிடம் திருப்பூர் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் எல்லாம் கலப்பட கூட்டணி அமைத்துள்ளது என்று விமர்சனம் செய்துள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, தேர்தல் கூட்டணி என்றாலே கலப்பட கூட்டணிதான் என்றார். #ThambiDurai #ADMK
    ×